இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைமை அலுவலகம் நாக்பூரில் அமைந்துள்ளது. இருந்தாலும் நாட்டின் தலைநகர் டெல்லியில் அலுவலகம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
1939-ம் ஆண்டு முதல் உள்ளூர் அலுவலகம் தற்போது டெல்லியில் பிரமாண்டமாக கட்டி எழுப்பப்பட்டுள்ள இந்த இடத்தில்தான் திறக்கப்பட்டது. இந்த அலுவலகத்தின் 2-வது தளம் 1962-ம் ஆண்டு திறக்கப்பட்டது. சுமார் 50 ஆண்டுகளுக்கு பிறகு பிரமாண்டமாக அலுவலகம் கட்ட திட்ட மிடப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கியது.
டெல்லி கேசவ்குஞ்சில் 4 ஏக்கர் பரப்பளவில் 3 கோபுரங்களுடன் இந்த அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு கோபுரத்திலும் 12 மாடிகள் உள்ளது. சாதாரண கட்டடமாக இல்லாமல் ஆர்.எஸ்.எஸ்.சின் அளப்பரிய சேவைகளின் நினைவு சின்னமாக கட்டி எழுப்பி இருக்கிறார்கள்.
குஜராத்தை சேர்ந்த கட்டடக் கலைஞரால் 75 ஆயிரம் தன்னார்வலர்களால் கட்டப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் திரட்டப்பட்ட ரூ.150 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.
நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் தங்குவதற்கு 300 அறைகள், சித்தாந்த கூட்டங்கள் நடத்த 2 பிரமாண்டமான ஆடிட்டோரியங்கள், ஷாகாக்கள் நடத்த ஹெட்கேவார் சிலை அமைக்கப்பட்டுள்ள பரந்த புல்வெளி மைதானம். இந்த புதிய அலுவலகத்தின் மையப் பகுதியில் மிகப்பெரிய நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நூலகத்தில் இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய பவுத்த நூல்கள், ஆராய்ச்சி நூல்கள் என 8,500-க்கு மேற்பட்ட நூல்கள் இடம் பெற்றுள்ளன.
விவாத அரங்கம் 473 மற்றும் 123 பேர் அமரக் கூடிய வகையில் இடம் பெற்றுள்ளது. ஒரே நேரத்தில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் அமர்ந்து சாப்பிடும் உணவு அறை ஆகியவையும் உள்ளன.
முதல் கோபுரத்துக்கு சத்னா டவர் என்றும 2-வது கோபுரத்துக்கு பிரார்னா டவர் என்றும், 3-து கோபுரத்துக்கு அர்ச்சனா டவர் என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
2-வது கோபுரத்தின் 9-வது மாடியில் பத்திரிகையாளர்கள் அறை மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் தங்கும் அறை இடம் பெற்றுள்ளது.
வெளியிடங்களில் இருந்து வரும் ஊழியர்கள் தங்குவதற்கு 3-வது கோபுரத்தில் 80 அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தரை தளத்தில் 5 படுக்கை வசதியுடன் கூடிய ஆஸ்பத்திரியும் இடம்பெற்றுள்ளது.
தற்போது நாடு முழுவதும் 3,500 முழுநேர ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். இந்த புதிய அலுவலகம் உருவானதன் மூலம் பணிகளை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளார்கள்.