கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏராளமான பகுதிகள் வனப்பகுதியை ஒட்டியுள்ளன. இயற்கை எழில் சூழ்ந்து காணப்படும் இந்த பகுதிகளுக்குள் யானை, சிறுத்தை, புலி உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி புகுந்து விடுகின்றன.
இதனால் மனித உயிருக்கு தொடர்ந்து அச்சுறுத்தலான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில் வயநாட்டில் சமீப காலமாக வன விலங்குகள் அட்டகாசம் அதிகளவில் நடந்து வருகிறது. புலி, சிறுத்தை, காட்டுயானை உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து தாக்கியதில் உயிர் பலியும் ஏற்பட்டது.
வயநாடு மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் காட்டு யானைகள் தாக்கி 4 பேர் பலியாகி விட்டனர். வனவிலங்குகள் தாக்குதலுக்கு உள்ளாகி மனிதர்கள் பலியாவதை தடுக்க அரசு அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.
இந்தநிலையில் அந்த கோரிக்கையை வலியுறுத்தியும், வனவிலங்குகள் தாக்குதலுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளை கண்டித்தும் வயநாடு மாவட்டத்தில் முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று கேரள மாநிலத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைமையில் இயங்கும் ஐக்கிய ஜனநாயக முன்னணி அறிவித்தது.
அதன்படி இன்று வயநாடு மாவட்டத்தில் ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில் முழு அடைப்பு போராட்டம் இன்று நடந்தது. இந்த போராட்டம் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வயநாடு மாவட்டத்தில் ஏராளமான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அதேநேரத்தில் பெரும்பாலான கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்பட்டன. பல இடங்களில் போராட்டக்காரர்கள் திரண்டனர். அவர்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை போலீசார் தடுத்துநிறுத்தி கைது செய்தனர். அப்போது சில இடங்களில் போராட்டக் காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்கு வாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மாவட்டத்தின் நுழைவு பகுதிகளில் போராட்டக்காரர்கள் வாகனங்களை தடுத்து நிறுத்தினர்.
அவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது போராட்டக் காரர்களுக்கும், போலீ சாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர். இதன் காரணமாக வயநாடு மாவட்டத்தில் பல இடங் களில் பதட்டமாக சூழல் நிலவியது.
போராட்டக்காரர்கள் திரண்ட இடங்களில் ஏராள மான போலீசார் குவிக்கப் பட்டனர். ஐக்கிய ஜனநாயக முன்னணி முழு அடைப்பு போராட்டம் நடந்ததால் வயநாட்டில் தனியார் பஸ்கள் இன்று இயக்கப்பட வில்லை. சில இடங்களில் போராட்டக்காரர்கள் அரசு பஸ்களையும் மறித்து நிறுத்தினர்.
இதனால் வயநாடு மாவட்டத்தில் பஸ் போக்குவரத்து இன்று பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக கல்வி நிலையங்களுக்கு சென்ற மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.